#Uncategorized

ஆர்டெமிஸ் – நாசாவின் புதிய நிலவுப் பயணம்

மனிதர்கள் நிலவிற்கு சென்று அதன் மேற்பரப்பில் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் பின்னர் மனிதர்களின் கவனம் செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் என வேறு திசைகளில் இருந்தது.

ஆனால் மீண்டும் நிலவிற்கு செல்ல வேண்டும் என்று நாசா முடிவெடுத்துள்ளது. அதனை நிறைவேற்ற கடந்த சில வருடங்களாக நாசா முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

பூமிக்கு மேல் 250 மைல் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்கி இருந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 20 வருட அனுபவம் நம்மால் நிலாவிலும் தங்கி இருக்க முடியும் என உற்சாகம் கொடுத்துள்ளது.

மனிதர்களால் நிலாவில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்ய முடியுமானால், அதே உத்தியை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்திலும் வாழ முடியும் என்பது நமது கனவு.

நாசாவின் இந்த மீண்டும் நிலவு திட்டம் தான் ஆர்டெமிஸ் (ARTEMIS).

ஆர்டெமிஸ் திட்டம்:

இதுவரை பெண்கள் நிலவிற்கு சென்றதில்லை. அதே போல் வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே நிலவிற்கு சென்றுள்ளார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் வகையில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் போது, ​​நாசா முதல் பெண்ணையும், முதல் வண்ண நபரையும் (வெள்ளையர் அல்லாதோர்) நிலவில் தரையிறக்கும்.

புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்பை விட நிலவின் மேற்பரப்பை அதிகம் ஆராயும். நாசா அதன் வணிக மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் ஒத்துழைத்து முதல் முறையாக நிலாவில் நிலையான ஆராய்ச்சியை நிறுவும். பின்னர், நிலவிலும் அதைச் சுற்றியும் நாம் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் அடுத்த மாபெரும் சவாலை நிறைவேற்றும்.

  • Send first women to moon
  • Send first man of color to moon
  • Establish sustainable research on the surface of moon
  • Using the knowledge we gained from Lunar Research, prepare for Mars exploration

நாம் ஏன் மீண்டும் நிலவிற்கு செல்கிறோம்?

  1. புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக நாம் நிலாவிற்கு செல்கிறோம். இதன் மூலம் நம்மால் மார்ஸ் கிரகத்தை சென்றடைய தேவையானவற்றை தெரிந்துகொள்ள முடியும்.
  2. பல்வேறு நாடுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் பொருளாதாரம் முன்னேறும்.
  3. அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் கொடுக்கும்.

எப்போது நாம் நிலவிற்கு செல்கிறோம்?

2021 ஆர்ட்டெமிஸ் 1: முதலில் நாசா விண்வெளி ஏவுதல் அமைப்பு மற்றும் ஓரியன் விண்கலத்தை சோதிக்கும். இந்த ஆளில்லாத சோதனைப் பயணம் 2021 ல் நடைபெறும்.

2022 ஆர்ட்டெமிஸ் 2: 2022ல் விண்வெளி வீரர்களுடன் இப்பயணம் நடைபெறும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் நிலாவில் இறங்க மாட்டார்கள். மாறாக அவர்கள் விண்கலத்திலேயே இருந்து நிலவை சுற்றி வருவார்கள்.

2023 ஆர்ட்டெமிஸ் 3: 2023 ல் இந்த மூன்றாம் கட்ட பயணம் நடைபெறும். இப்பயணத்தின் போது ஆராய்ச்சியாளர்கள் நிலவில் இறங்கி சோதனை செய்வார்கள்.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் நிலவிற்கு சென்று திரும்புவார்கள்..

எப்படி நாம் நிலாவிற்கு செல்கிறோம்?

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை போல, நிலவை சுற்றி வரும் கேட்வே என்னும் அமைப்பை நாசா உருவாக்கும். அதே போல் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி கட்டமைப்புகளை உருவாக்கும். இதனால் ரோபோக்கள் மற்றும் விண்வெளி வீரர்களை முன்பை விட அதிகமாக ஆய்வுப்பயணம் செய்யவும் அதிக அறிவியல் ஆராய்ச்சிகளையும் நடத்த முடியும்.

பின்வரும் ஆறு பிரிவுகளின் கீழ் நாசா அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

1. ராக்கெட்டுகளை ஏவுதலுக்கு தேவையான தரைக் கட்டமைப்புகள்

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஏவுதள வசதிகளையும் நாசா மேம்படுத்துகிறது.

2. SLS – உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்

நாசாவின் சக்திவாய்ந்த புதிய ராக்கெட் மனிதர்களையும், சரக்குகளையும் நிலாவிற்கும் அதற்கு அப்பாலும் அனுப்பும்.

Saturn V க்கு அடுத்து டீப் ஸ்பேஸ் (deep space) ற்கு செல்லும் வகையில் SLS (Space Launch System) வடிவமைக்கப்பட்டு உள்ளது.

3. ஓரியன் – Orion – சந்திரனுக்கு செல்லும் விண்கலம்

நாசாவின் ஓரியன் விண்கலம் ஆராய்ச்சி குழுவினரை நிலவின் சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும். பின் அவர்கள் நிலவை தொடர்ந்து சுற்றிவரும் கேட்-வே-யுடன் இணைந்து கொள்வார்கள்.

ஆராய்ச்சிக்கு பின்னர், ஓரியனை பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பிவார்கள். பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் ஏற்படும் கடுமையான வெப்பத்தைத் தாங்கும் வகையில் ஓரியன் கட்டப்பட்டுள்ளது.

4. கேட்வே – Gateway – சந்திரனை தொடர்ந்து சுற்றி வரும் விண்கலம்

ஆழமான விண்வெளியில் (deep space) மனித மற்றும் விஞ்ஞான ஆய்வுகளை ஆதரிப்பதற்காக சந்திரனைச் சுற்றி வரும் நிலையம் கேட்வே (நுழைவாயில்) ஆகும். அதாவது பூமியை தொடர்ந்து சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை போல, கேட்வே நிலாவை சுற்றி வரும்.

வணிக மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் கட்டப்பட்ட இந்த நுழைவாயில் நிலையான நிலவு ஆய்வுக்கு முக்கியமானது. செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால பயணங்களுக்கு இந்த நிலையம் முன் மாதிரியாக செயல்படும்.

5. லூனார் லேண்டர்ஸ் – சந்திரனில் இறங்கும் விண்கலம்

நவீன மனித தரையிறங்கும் முறைகளை வடிவமைக்க காலத்தில் நாசா மூன்று அமெரிக்க நிறுவனங்களுடன் பணியாற்றியது.

SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் HLS வடிவமைப்பை நாசா தேர்வு செய்துள்ளது (HLS – Human Landing System). அதன்படி SpaceX நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை நிலவில் தரையிறக்கும்.

6. ஆர்டிமிஸ் பேஸ் கேம்ப்

மனிதர்கள் நிலவில் தங்கி இருந்து வேலை செய்ய பேஸ் கேம்ப் உருவாக்கப்படும். இதில் நவீன அறை, ஒரு ரோவர் மற்றும் ஒரு மொபைல் வீடு அடங்கும்